வீட்டு உரிமையாளர்களுக்கு தெரியாமலேயே வீடுகளை லீசுக்கு விட்டு சுமார் ரூ.12 கோடி மோசடி.. பணத்தை சுருட்டிய "அறிவு நம்பி" தலைமறைவு..!
வீட்டு உரிமையாளர்களுக்கு தெரியாமலேயே, வீடுகளை லீசுக்கு விட்டு சுமார் 12 கோடி ரூபாய்க்கு மேல் சுருட்டிய நபரை கைது செய்து, பணத்தை மீட்டுத்தரக் கோரி பாதிக்கப்பட்டவர்கள் சோழிங்கநல்லூரில் உள்ள தாம்பரம் காவல் ஆணையரகத்தை முற்றுகையிட்டனர்.
கூடுவாஞ்சேரி அடுத்த பொத்தேரி பகுதியில் அறிவுநம்பி என்பவர் அசோசா என்ற நிறுவனம் சார்பில் மாதந்தோறும் வீட்டிற்கு வாடகை தருவதாக கூறி வீட்டின் உரிமையாளர்களிடம் ஒப்பந்தம் போட்டுள்ளார். அதன் பிறகு அந்த வீடுகள் காலியாக இருப்பதாக விளம்பரம் செய்து ரூபாய் 3 லட்சம் முதல் 15 லட்சம் வரை பணத்தை பெற்று லீசுக்கு விட்டதாக கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக வாடகை தரவில்லை என்பதால் வீட்டில் குடியிருந்தவர்களை உரிமையாளர்கள் வெளியேற்ற முயன்ற போது தான் இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது பணத்தை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தாம்பரம் காவல் ஆணையரகத்தை முற்றுகையிட்டனர்.
சில பெண்கள் பணம் பறி போனதை எண்ணி கண்ணீர் சிந்தினர். இந்த மோசடி வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக ஆணையர் ரவி உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
Comments